எனது கணவரின் மைத்துனரான திரு.இராஜேஸ்வரன் அவர்கள், எமது திருமணத்தின் பின் எனது சகோதரராக அறிமுகமானார். அறிமுகமான போது அவர் தோற்றத்தில் சிறிது கடுமையானவர் போற்தோற்றமளித்தாலும், பழகுவதற்கும், பிறருக்கு உதவிகள் செய்வதிலும் விரும்பத்தக்க ஒருவராக இருந்தார்.அவர் கடைசிவரை எம்குடும்பத்தோடு நல்லுறவோடு பழகி, கணவருக்கு நல்ல நண்பராகவும், நம்பிள்ளைகளிற்கு நல்லதொரு மாமாவாகவும் இருந்து வந்தார்.
குறிப்பாக ஏனையவர்கள் கூறியது போல் 1990 களில் நாம் பிள்ளைகளோடு இங்கு வாழ்ந்த காலத்தில் கணணி , இணையம், கைத்தொலைபேசி, போன்ற தொழில்நுட்பவசதிகளும், வானொலி ,தமிழ்த்தொலைக்காட்சி போன்ற தமிழ் ஊடகங்களும் இல்லாத காலம்.அந்த சூழ்நிலைகளில் அவருக்கிருந்த தமிழ் ஆர்வம் புலம்பெயர் தமிழ்ப்பிள்ளைகளிற்கு எப்படியாவது தமிழக்கல்வியைப்புகட்ட வேண்டுமெனத்தூண்டியது.இதற்காக அவர் கடினமாக உழைத்தார்.இது எமக்கு அந்த நேரம் கிடைத்த அதிர்ஸ்டமென்றே கூறவேண்டும்.
தற்போது ஜேர்மனி முழுவதும் மாநிலரீதியாக பல பாடசாலைகள் இயங்கிவருகின்றன. அந்தக்காலத்தில் பாடசாலைகளோ, பரீட்சைநிலையங்களோ அரிதாகவே இருந்தன.அந்த நேரத்தில்திரு.ஜீவகன்அவர்களால்நடாத்தப்பட்ட(ஜேர்மனி தமிழ்க்கல்விக்கழகம்)பரீட்சைக்கு தனக்குத்தெரிந்த தமிழ் மாணவர்களை ஒன்று திரட்டி, தனது பொறுப்பிலேயே,பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச்சென்று பரீட்சை எழுத வைப்பார். அந்த ஆரம்ப அடிப்படைக்கல்வி தான் தொடர்ந்து நம்பிள்ளைகளிற்கு தமிழ் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது.கூடவே சிறுவர் அமுதத்தின் வருகை,அவரால் நடாத்தப்பட்ட கலைநிகழ்வுகள் மேலும் பிள்ளைகளின் எழுத்தாற்றல் , கலையார்வம் என்பவற்றை வளர்த்தன. அதோடு வீட்டுவாழ்க்கையில் முடங்கிப்போயிருந்த பெற்றோருக்கும் பல அறிவான நூல்களையும், பட்டிமன்றம் போன்ற ஒளிப்பதிவு நாடாக்களையும், எடுத்து வந்து அளித்து, அவர்கள் பொழுதுகளையும் நல்ல முறையில் கழிப்பதற்குஉதவி செய்தார்.அவரவர்களுக்கு எவையெல்லாம் பிடிக்குமோஅவற்றைத்தேர்ந்தெடுத்தளிப்பதில் வல்லவர். வசதிகளில்லாத காலங்களில் எத்தனையோ செய்தவர், இப்போது எம்முடன் இருந்தால் இன்னும் எவ்வளவோ செய்திருப்பார் என்பதைநினைக்கும் போது மனம் வேதனையடைகின்றது.
என்றாலும் இந்த 70 ஆவது அகவையில் அவர் நினைவுகளையும், அவர் எழுதிய நூலையும் பகிர்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்த மருமகள் பிங்கலைக்கு நன்றிகள்..
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....
திருமதி. சந்திரமலர் மகேந்திரன்.
Meerbusch
Germany.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக