28 ஜூன், 2020

நினைவுகள் ~ பொன் .புத்திசிகாமணி

பன்முகத்திறமை கொண்ட நல்லமனிதர்!அமரர் சின்ன ராஜேஷ்வரன்!
அவரது நினைவுகளோடு!
பொன்.புத்திசிகாமணி.
எனக்கும் அமரருக்குமான வரலாற்றுப் பதிவில் முகவுரை எப்போது நடந்தது என்று இன்றுவரை யோசிப்பதுண்டு.
அவரின் முடிவுரையை அறிந்து கவலையுற்ற எனக்கு,இடையில் ஏற்பட்ட அவரது வாழ்க்கையில் பாதிக்குமேல் என் பதிவிருக்கும்.என்பதை நினைத்துப் பார்த்து மகிழ்வதுண்டு.
எங்காவது ஒரு நிகழ்வில் முதலில் அறிமுகமாகி இருப்பேன். அது"மண்"சஞ்சிகை விழாவாகவும் இருந்திருக்கும்.
அறிமுகமான காலத்திலிருந்து ஏதோ ஒருவித த்தில் எங்களுக்குள் தொடர்பு இருந்து கொண்டே வந்தது.
வலது கை அவரின் பின்பமாக இடது கையைப் பிடித்து கொஞ்சம் வளைந்து நிற்கிற கோலத்தை இப்போதும் கண் முன்னே நிறுத்திப் பார்க்கிறேன். அவர் சேர்ந்து இருந்த இடம் கலகலப்பாய் இருக்கும், சந்தோசமான மனிதர் இவர். பல கதைகள் அவர் வாயில் இருந்து பிறந்தது.
புலம்பெயர்ந்தபோதும் எமது சந்ததியினரின் எதிர்கால வாழ்க்கையைப்பற்றி சிந்தித்து அதற்கான அடித்தளத்தை சிறுவர் சஞ்சிகைமூலம் செய்து காட்டியவர்.வசதியில்லாத ஆரம்ப காலத்தில் கையெழுத்தால் உருவமைத்து வெளிவந்தது "சிறுவர் அமுதம்".
எமது பிள்ளைகளின் தமிழ்க்கல்விக்கு சிறுவர் இலக்கியங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை முதல் முதலில் செய்து காட்டியவர்.இவர்.
கொக்சவலாண்ட் தமிழர் ஒன்றியத்தை உருவாக்கி,அதன் மூலம் ஐந்து பாடசாலைகளை நடாத்திவந்தோம்.இந்த அமைப்பின் தலைவராக நானும்,இணைச்செயலாளர்களாக திரு பரிமளராசா அவர்களும்,திருஜெயபாலன் அவர்களும்,ஏனைய நிர்வாகசபையினரும் செயல்பட்டிருந்தோம்.
இது தொண்ணூறுகளில் நடந்தது.முதல் நாள் நிகழ்வாக பாடசாலை மாணவர்களின் பேச்சு,பாட்டு,ஓவியம் என்று போட்டிகள் நடைபெறும்.
இந்தப் போட்டிகளுக்கு நடுவர்களாக திரு சின்னராஜேஷ்வரன்,"அறுவை"திரு சி.லோகநாதன்,"வெற்றி மணி"ஆசிரியர் திரு சிவகுமாரன் ,திருமதி கல்பனா ஞானகிருஸ்ணன்,அவர்களையும் அழைப்பதுண்டு.இரண்டாம் நாள் விளையாட்டுப் போட்டியும் மூன்றாம் நாள் முத்தமிழ் விழாவும் நடைபெறும் .அனைத்து நிகழ்வுகளிலும் வருகைதந்து சிறப்பித்தவர் அமர்ர்.சின்ன ராஜேஷ்வரன் அவர்கள்.
இவர்மூலமே,காலம்சென்ற சகோதரன் ராஜன் முருகவேளும் எனக்கு அறிமுகமானார்.
முத்தமிழ்விழாவில் ஆசிரியர் குமரன் தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்திலும் இவர்கள் கலந்து கொள்வார்கள்.
இவை எல்லாமே இவரோடு நான் பயணித்த சிறப்பான காலங்கள்.
அரசியல் என்பது அவனவன் சுயபுத்தியால் ஆனது.அதன் சுதந்திரம் அவனால் நிச்சயிக்கப்பட வேண்டும்.என்று ஆணித்தரமாகச் சொல்லி ,இருக்கும் வரை அவ்வாறே வாழ்ந்து காட்டியவர்.எந்தக் கருத்தையும் ஒழிவு மறைவின்றி மனத்திறந்து பேசியவர்.
எவரையும் கண்டு அஞ்சி அறியாதவர்.அவரைச்சுற்றி குழுவாக நாங்களும் இருந்திருக்கிறோம்.என்பதே பெருமை அளிக்கிறது..பட்டி மன்றங்கள்,கவியரங்குகள்,கலைவிழாக்கள் என்று அந்தநாள் நாம் கலந்து கொண்ட நினைவுகள்.நினைக்கும் போது கவலையைத்தருகின்றன.தாய் நாட்டுப்பற்றும்,தமிழ் மொழிப்பற்றும் அவரது பார்வையில் யதார்த்தத்தைப் பேசியது.அது எல்லோருக்கும் விளங்கவில்லை என்பது துரதிஷ்டமானது.
பட்டிமன்றத்திற்குப் போய் திரும்பிய போது காலன் அவரைக்காவு கொண்டான்.
ஆசிரியர் குமரன் தலைமையில்,அறுவை சி.லோகநாதன்,வில்லுப்பாட்டு நாச்சிமார் கோவிலடி ராஜன்,சின்னராஜேஷ்வரன்.கலந்து கொண்ட பட்டிமன்றம் அது.
குமரன் வீட்டிற்குப்போக மற்றவர்கள் திரும்பி இருந்தார்கள்.
இந்த நால்வருடன் திருமதி விஜிதா லோகநாதனும் காரில் வந்திருந்தார்.அப்போதுதான் இந்த விபத்து நடந்தது.
திருமதி ஜஸ்மின் பரிமளராசா தான் ரெலிபோனில் இந்த துயரச்செய்தியைச் சொன்னார்.நான் அதிர்ந்து போனேன்.மற்றவர்கள் காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்கள்.குமரன் மாஸ்ரருக்கு இது பற்றி தெரியாது.அவர் மறுநாள் எனக்குத்தான் ரெலிபோன் எடுத்தார்."போனவங்கள் ஒரு ரெலிபோன் கூட இல்லை.வீட்டை எடுக்க ஒருத்தரும் எடுக்கிறாங்கள் இல்லை.எங்கை ஆட்கள்?"என்று கேட்டார்.
அப்போதுதான் நான் விசயத்தைச் சொன்னேன்.அவர் கொஞ்சநேரம் எதுவுமே பேசவில்லை.உறைந்து போய் நின்றார்.
எனக்கும் இந்த பட்டிமன்றத்திற்கு அழைப்பு இருந்தது.ஏதோ காரணத்தால் என்னால் போகமுடியவில்லை.
இதேபோல்தான் காலஞ்சென்ற ராஜன் முருகவேளும் சொன்னார்.அவரும் இன்று இல்லை."கடல்"என்ற சஞ்சிகையை யாரும் மறந்து விடமுடியாது.இது எங்கிருந்து வருகிறது ,யாரால் ?என்ற கேள்வியில் நானும் தான் தேடித்திரிந்திருக்கிறேன்.
நாளடைவில் இவர்கள் தான் முக்கிய சூத்திரதாரிகள் என்பதை அறிந்த போது ஆச்சரியப்பட்டேன்.கடல் ராஜன் இவர் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். இன்று இருவருமே இல்லை.
அவரது இறுதிநிகழ்வில் கலந்து கொண்ட நினைவு இப்போதும் இருக்கிறது.
"வள்ளுவனாய் பாரதியாய் வடிவமைத்து வைத்திருந்தோம்-அந்த
வள்ளுவனும் பாரதியும் உன்னை வாவென
அழைத்தனரோ"
நான் எழுதிய அஞ்சலியில் சில வரிகள் இவை.இப்போதும் ஞாபகத்தில் உள்ளது.கலங்கி அழுது வாசித்த கண்ணீர் அஞ்சலி.
சிறுவர் அமுதம்"இனிமேல் எங்கே? வரப்போகிறது என்று கவலையுற்ற வேளையில்.
ஐந்து ஆண்டுகள் வெளிவரச்செய்து கணவனின் கனவை முடிந்தவரை நிறைவேற்றி வைத்த திருமதி புனிதமலர் இராஜேஸ்வரன் அவர்களை மனம் திறந்து பாராட்டுகிறேன்.அன்புக்கணவருக்கு அவர் அளித்த சந்தோசம் இது வென்றே கருதுகிறேன்.
இன்று அப்பாவின் .நினைவுகளைப் பதிவு செய்து ,தந்தைக்கு மீண்டும் உயிரூட்டி வரும்
அருமை மகள் திருமதி பிங்கலை செந்திலன் அவர்களின் இந்தச் செயல் எல்லாத் தந்தைக்கும் கிடைக்கக் கூடியதல்ல.
இவர்கள் இருவரோடும் அமர்ர் இராஜேஷ்வரன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனமாகும்.
"வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்-வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"
மகள் பிங்கலையின் இந்த எண்ணம் நிறைவேற,தந்தைக்குப் பெருமை சேர்க்க இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.
நன்றி.
அன்புடன் பொன் .புத்திசிகாமணி
19.06.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக