21 மே, 2020

நினைவுகள் ~ கலைவாணி ஏகாணந்தராஜா


ஆண்டுகள் 25 கடந்தாலும் எம் மனங்களை விட்டகலாத மா மனிதர் சின்ன ராஜேஸ்வரன். எங்கள் குழந்தைகளின் அமுதம் மாமா. 1990ம் ஆண்டு. அப்போது நான் Köln என்ற இடத்தில் சங்கீத வகுப்பு நடாத்திக்கொண்டிருந்தேன். அப்போது மலையாள சமூகத்தினர் மட்டுமே
என்னிடம் கற்றுவந்தனர். ஒரு நாள் 6 அல்லது 7 வயது பெண் குழந்தையுடன்
ராஜேஸ்வரன் அவர்கள் வகுப்புக்கு சமூகமளித்திருந்தார். அந்த சிறுமி மிக சரளமாக தமிழ் பேசுவதையும் பாடல்களை மிக விரைவாக பாடம்செய்து பாடுவதையும் கண்டு பிரமித்தேன். அதே வயதில் எமது பிள்ளைகள் தமிழ் எழுத வாசிக்க தெரியாமல் இருப்பதை ராஜேஸ்வரன் அவர்களிடம் என் கணவரும் நானும் மனவருத்தத்துடன் கூறினோம். அப்போது அவர் வீட்டுக்கு கூட்டிவாருங்கள் என் பிள்ளையுடன் சேர்ந்து விளையாடி தமிழ் கற்க வைக்கலாம் என்றார்.

அதன்படி கிழமையில் ஒருமுறையாவது அவர்கள் வீட்டுக்கு போய் வந்தோம். அவர் மகள் பிங்கலையும் எமது பிள்ளைகளுடன் விளையாடுவார் எங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதற்காக அவர்களுக்கு விருப்பமான மாம்பழம் வாங்கி வைத்திருப்பார். சிறிய கதைப்புத்தகங்களை கொடுத்து வாசிப்பதற்கு ஊக்கப்படுத்தினார். எங்கள் பிள்ளைகள் அவரை மாம்பழம் மாமா என்றுதான் ஆரம்பத்தில் குறிப்பிடுவார்கள். பின்னர் சிறுவர் அமுதம் வாசிக்கத் தொடங்கியபின்னரே அமுதம் மாமா என்பார்கள். அந்த புத்தகத்தில் வெளிவந்த விகடகவி, முல்லாவின் கதைகளை விரும்பிப் படிப்பார்கள். என் மகளின் பத்தாவது வயதில் ராஜேஸ்வரன் அவர்கள் எங்களை விட்டுப் பிரிந்தார். சின்ன சின்ன பூக்களால் சின்ன ராஜேஸ்வரனுக்கு அஞ்சலி புத்தகத்தில் (1994 ம் ஆண்டு) மாமாவுக்கு அஞ்சலிக் கவிதை ஒன்று எழுதியமை, குழந்தைகள் மனங்களில் ராஜேஸ்வரன் அவர்கள் எவ்வளவுதூரம் குடிகொண்டிருந்தார் என்பதற்கு சான்றாகும்.

என்னிடம் மகளை சங்கீதம் கற்க விட்டுவிட்டு என் கணவருடன் பல மணித்தியாளங்கள் வாகனத்தினுள் இருந்து பேசிக்கொண்டிருப்பார். நாம் திரும்பி வரும்போது என் கணவர் என்னிடம் அவரின் பரந்த அறிவு பற்றியும்,
மனிதநேயம் பற்றியும், தமிழினப்பற்று பற்றியும், குழந்தைகளின் வருங்காலம்
பற்றியுமே அவரது சிந்தனை இருப்பதை என்னிடம் கூறியிருக்கிறார். அவரது
இழப்பின்போது நாம் ஒரு நல்ல நண்பனை, நல்ல நாட்டுப்பற்றாளனை
இழந்துவிட்டோமே என்று கவலைப்பட்டோம். இந்த 70 ஆவது வயதில் அவரை நினைவுகூர்வது போல 100 வயதிலும் அதனை கடந்தும் நிச்சயம் எமது தமிழினம் அவரை நினைவு கூரும் என்பதில் ஜயமில்லை.

மகாத்மா காந்தி வாழ்ந்த காலங்களைவிட அவர் புகழ் அவரது அற்பணிப்புகளுடே இன்றும் வாழ்ந்துகொண்டிருன்கின்றார். அது போன்றே சின்ன ராஜேஸ்வரன் அவர்களும் வாழ்ந்துகொண்டிருப்பார்.

மனைவியை தொடர்ந்து மகள், மகளது பிள்ளைகள் என அவர் பணி தொடர
வாழ்த்துகிறேன்.
கலைவாணி. ஏகாணந்தராஜா (சங்கீத ஆசிரியை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக