18 மே, 2020

நினைவுகள் ~ "மண்" சிவராசா

“சிறுவர் அமுதம்” சஞ்சிகை ஆசிரியர் சின்ன இராஜேஸ்வரன்  
      மறைந்து 25 வருடங்கள் ஓடிவிட்டாலும்….

"கடல்" ராஜன், சின்ன இராஜேஸ்வரனுடன், "மண்" சிவராசா
இலங்கைத் தமிழர்கள் தாயகத்தில் ஏற்பட்ட இனப்போராட்டங்களால் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டமை உலக வரலாறாகும். அந்த வகையில்தான் அமரர் சின்ன இராஜேஸ்வரனும் நானும் 1983ம் ஆண்டில் யேர்மனிக்கு வந்து சேர்ந்தோம்.

அவர் ஒரு நகரிலும் நான் ஒரு நகரிலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். யேர்மனியில் தமிழர்களின் குடியேற்றப்பரம்பல் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. அகதிகளாகக் குடியேறிய தமிழர்கள் மத்தியில் எமது தாய்மொழிபற்றிய எதிர்காலச் சிந்தனைகளும் அக்கறைகளும் மேலோங்கி வளரத் தொடங்கின. தாயகத்திலிருந்து வந்த குழந்தைகள், இங்கு பிறந்த குழந்தைகளின் எதிர்காலத் தாய்மொழிக் கல்வியின் அக்கறை வேர்விடத் தொடங்கியது. நாம் எங்கு வாழ்ந்தாலும் எமது மொழி, கல்வி, கலாச்சார, விழுமியங்கள் அழிந்து விடாமல் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டும் என்னும் தூரநோக்கில் ஆங்காங்கே சில சஞ்சிகைகளும் சிறு..சிறு பாடசாலைகளும் தோற்றம் பெறத்தொடங்கின. இந்த நல் நோக்கில்தான் அமரர் சின்னத்தம்பி இராஜேஸ்வரன் அவர்களால் 1990ம் ஆண்டில் Elsdorf என்ற அவர் வசித்த இடத்தில் சிறுவர்களுக்கான “சிறுவர் அமுதம்” என்னும் மாதாந்த சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது.

இதே ஆண்டில்தான் இன்றுவரை யேர்மனியில் வெளிவந்து கொண்டிருக்கும் “மண்” கல்வி, கலை, இலக்கிய, சமூக சஞ்சிகையும் நான் வசிக்கும் Duisburg நகரில் ஆரம்பிக்கப்பட்டு இன்று முப்பது வருடங்கள் தாண்டித் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. இதன் பிரதம ஆசிரியராக நான் இருந்து வருகின்றேன்.

அமரர் சின்ன இராஜேஸ்வரன் அவர்கள் யாழ்மாவட்டத்தில் பிறந்து கிளிநோச்சியில் குடியேறி வாழ்ந்தவர். நானும் யாழ் மாவட்டத்தில் பிறந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி-துணுக்காய்ப் பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்தவன். விவசாயக் குடியேற்றம் கூலித்தொழில், விவசாயத்தொழில் எனப்பாமர மக்ளோடு நாம் இருவரும் வாழ்ந்தபடியால் எப்போதும் நம் இருவரின் சிந்தனைகள் செயற்பாடுகள் சாதாரண மக்களோடு கலந்திருந்தன. அவர் அரச தபால் துறையிலும் நான் அரச கூட்டுறவுத்துறையிலும் பல வருடங்கள் கடமையாற்றிவிட்டுத்தான் புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்து சேர்ந்தோம்.

நாம் படித்த கல்வி, தேடிப்படித்த புத்தகங்கள் பழகிய நட்புக்கள், தோழர்கள் என அனைத்துமே நம் இருவரையும் கம்யூனிச மார்க்ஸிய சிந்தனைகள் ஈர்த்ததுடன் அப்படியே பொதுஉடமை வாதிகளைப் போல வாழவைத்தது என்றுதான் கூறவேண்டும். எப்போதும் தொழிலாளர்கள் விவசாயிகள் பக்கமே எமது சிந்தனை ஓட்டம் வியாபித்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகக்காணப்பட்டது.

யேர்மனியில் அந்தக்காலகட்டத்தில் ஆங்காங்கே சிறு கடைகள், ஆலயங்கள் பாடசாலைகள், இலக்கியக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆரம்பமாகிய பொழுதுதான் 1988ம் ஆண்டளவில் நம் இருவரிடையேயும் இறுக்கமான நட்பு வளர ஆரம்பித்தது. நாம் இருவரும் ஒரே கொள்கை, ஒரே சிந்தனையில் ஊறியிருந்தபடியால் நமது நட்பு, தோழமை எந்தவகையிலும் குறையவே இல்லை. இப்படியாக வாழ்கையில்தான் 1990ம் ஆண்டில் “சிறுவர் அமுதம்”  சஞ்சிகையும் “மண்” சஞ்சிகையும் தோற்றம் பெற்றன.

1985ம் ஆண்டுக்காலப் பகுதிகளில் நாம் இருவரும் யேர்மனியில் ஆங்காங்கே நடைபெற்று வந்த விழாக்கள், கூட்டங்களில் கலந்துகொள்வதுடன் விழா மேடைகளில் எமது குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அப்போது இருந்த யேர்மனிய அரச சட்டங்களின்படி நாம் ஒரு நகரத்தைவிட்டுப் பிற நகரங்களுக்குச் செல்லமுடியாது. அவ்வளவு இறுக்கமான சட்டங்கள். போய்ப்பிடிபட்டால் தண்டப்பணம் செலுத்த வேண்டும். வதிவிட விசா வழங்குவதிலும் சில்கல்கள் காணப்பட்டன. அப்படி இருந்தும் குற்றப்பணம் செலுத்திலும் பொலிசாரின் விசாரணைகளுக்கு முகம்கொடுத்தும் நாம் பல விழாக்களுக்கு பல நகரங்களுக்கும் சென்றுவந்த பல சுவார்சிமான சம்பவங்களும் உண்டுதான். எங்கள் மொழி, இனம் மீது நாம்கொண்டிருந்த பற்றே எங்களை அப்படியாக அன்று வாழவைத்தது என்றே கூறவேண்டும்.

அந்தக்காலகட்டத்தில் நம் இருவரோடு சேர்ந்து இயங்கிய நண்பர்களைப்பார்த்தால்  ஆசிரியர் சிறீஜீவகன், கலைவிளக்கு பாக்கியநாதன், ஏலையா முருகதாசன், குமரன் மாஸ்ரர், தோழர்கள் ஜெயபாலன், பரிமளராசா, கபிலன், சிவரட்ணராசா, கிருஸ்ணமூர்த்தி, எழுத்தாளர் புத்திசிகாமணி, அறுவை லோகநாதன்;, எழுத்தாளர் இராஜகருணா, எழுத்தாளர் சிறிஸ்கந்தராசா, எழுத்தாளர் ரவி, எழுத்தாளர் நித்தி, எழுத்தாளர் தியாகேஸ்வரன், நாடகக்கலைஞர் கதிர்காமநாதன், கலைஞர் சத்தியமூர்த்தி, வில்லுப்பாட்டு ராஜன் மற்றும் எழுத்தாளர்களான விக்னா பாக்கியநாதன், கோசல்யா சொர்ணலிங்கம், செந்தில்செல்வி, நகுலா சிவநாதன், திருமதி லோகநாதன், இராஜேஸ்வரி சிவராசா இன்னும் பலரைக் குறிப்பிட்டுச் சொல்வதுடன் அமரர் ராஜன் “கடல்” சஞ்சிகை ஆசிரியரும் எங்களுடன் நெருங்கிப் பழகி உற்ற நண்பனாக இலக்கியவாதியாகச் செயற்பட்டவர் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறவேண்டும்.

1990ம் ஆண்டு சிறுவர் அமுதம் தோற்றம் பெறும்போது அது கையெழுத்துப் பிரதியாகவே மாதாந்தம் வெளிவந்தது. பின்னர் தட்டச்சுக்கு மாற்றம் கண்டது. பின்னர் கணனி மயமாக்கப்பட்டு அழகான மலராக வெளிவந்தது. குறிப்பாக யேர்மனியில் தமிழர்கள் கூடுதலாக வாழும் மாநிலமான நோத்றைன் வெஸ்பாளின மாநிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இல்லங்களில் கூடுதலாக விநியோகிக்கப்பட்டாலும் எனைய மாநிலங்களிலும் பரவலாக இச்சஞ்சிகை போய்ச் சேர்ந்தது என்பது வரலாறாகும்.

“கடல்” என்னும் சமூக சஞ்சிகையும் அக்காலத்தில் தோற்றம் பெற்று கலக்குக்கலக்கென்று வெளிவந்தது. தமிழ்ச்சமூக அநீதிகள், சாதிய சமய கொடுமைகள், பிரதேச வேறுபாடுகள், கல்வி, சமயம் என்ற பெயரில் ஏமாற்றிப் பிழைப்பு நடத்தியவர்கள் போன்ற பல்வேறு சமூகப்பிரச்சனைகளை வெளிக்கொண்டுவந்து நம் மக்களை விழிப்படைய வைத்தது. இந்தச் சஞ்சிகையினதும் எமது மண் சஞ்சிகையினதும் ஆலோசகராகவும் இருந்து கடமையாற்றிய அமரர் சின்ன அராஜேஸ்வரனின் பங்களிப்பு மிகப் பெரிது. கடல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றிய அமரர் ராஜன் முருகவேள் அவர்களும் நானும் இவருடன் நெருங்கிய நண்பர்களாக இருந்து தமிழ், இலக்கியப்பணியாற்றிய காலம் ஒரு பொற்காலம் என்றே கூறலாம்.

அன்றைய காலகட்டத்தில் இந்த மாதாந்த சிறுவர் அமுதம் சஞ்சிகையானது விழாக்கள், தமிழ்க்கடைகள், தபால் மூலம் விநியோகிக்கப்பட்டது. இச்சஞ்சிகையில் சிறுவர்களுக்கான கதைகள், திருக்குறள், கொன்றைவேந்தன், சிறுவர்பாடல்கள், தமிழ்சொற்கள், கதைகள், அறிவியல்கதைகள், விஞ்ஞான விளக்கம், கண்டுபிடிப்புகள், பெரியர்ர்கள், தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள், சமயப்பெரியார்கள், சமூகத்தொண்டர்கள், புரட்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தாயக வரலாறுகள், உலகநடைமுறைகள் எனப் பல்வேறுபட்ட அம்சங்கள் அன்றைய சிறுவர்களுக்கு மாத்திரமல்ல அனைத்து வயதினருக்கும் தீனிபோட்டது என்று பெருமையாகக்குறிப்பிடலாம்.

அப்போது மட்டுமல்ல இப்போதும் நம்மிடையே காணப்படும் அரசில் வேறுபாடுகளைப் தவிர்த்து கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் சஞ்சிகையாக வளர்த்தெடுப்பதில் அமரர் அவர்கள் பெரு வெற்றி கண்டார். முன்மாதிரியான சஞ்சிகையாக வளர்த்தெடுப்பதில் அரும்பாடுபட்டு உழைத்தார். எவ்வித அரசியல் வேறுபாடுகளுக்கும் இடங்கொடுக்காமல் தமிழ் ஒன்றே மூச்சு என்று எண்ணி இச்சஞ்சிகை வெளிவந்தபடியால் சிறுவர் அமுதம் யேர்மனியில் முதலாவது சிறுவர் தமிழ்ச்சஞ்சிகை என்ற வரலாற்றுப் பதிவையும் பெற்றுக்கொண்டது.

கணனி, கைத்தொலைபேசி, தொழில்நுட்பங்கள் மிகக்குறைந்த காலம் அன்று. அந்தக்காலத்தில் அவர் கொண்ட கொள்கையில் அசையாமல் நின்றார். போட்டிகள் பொறாமைகள், கேடுகளைக் கண்டு அஞ்சாமல் துணிந்து இச்சஞ்சிகையை வெளிக்கொண்டுவந்தார். அவரின் முயற்சி, கடினஉழைப்பு, பொதுநோக்கு, அர்ப்பணிப்பு, நேர்மை என்பன கைகூடவே சிறுவர் அமுதத்தைக் கணனிமயமாக்கி அழகான மலராக வெளிவரச் செய்தார். அப்போது பல தமிழ்க்குடும்பங்கள் இச்சஞ்சிகையைத் தேடித்தேடி வேண்டிப் படித்தனர். தம் பிள்ளைகளுக்குத் தமிழை ஊட்டி வளர்த்தனர். பல ஆயிரம் சிறுவர்களின் பொக்கிஷமாக விளங்கியது. பல மொழிகளுடன் தமிழையும் இடைவிடாது கற்க வழிகோலியது இந்தச் சிறுவர் அமுதம். இந்தச் சஞ்சிகைமூலம் தமிழ்மொழியைக் கற்று வளர்ந்த சிறுவர்கள் பின்னாளில் தமிழ்ப்பாடசாலைகளில் ஆசிரியர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும, கலைஞர்களாகவும்; தடம்பதிக்துள்ளனர் என்பதும் வரலாறாகப் பதிவாகியதே.
இவர் ஒரு சஞ்சிகை ஆசிரியர் என்றுமட்டும் கூறிவிடமுடியாது. சிறந்ததொரு தழிழாசிரியர் என்றும் சொல்லலாம், இலக்கிய, இலக்கண, மொழிவளம் கொண்டவர். தனது சஞ்சிகையூடாக கேள்வி பதில்களைப் பிரசுரித்து மாணவமணிகளைப் பதில் எழுதி தபால் மூலம் அனுப்பச் செய்து ஒரு அஞ்சல்க்கல்வி முறையாகவும் பல சிறுவர்களை எழுத, வாசிக்க, சிந்திக்க வைத்த சிற்பி என்றே கூறிக்கொள்ளலாம். தனது வீட்டையே ஒரு நூலகமாக மாற்றியருந்ததை அன்று என்போன்ற பலர் அவரது வீட்டுக்குச் சென்ற காலங்களில் பல நூல்களையும் எடுத்துப் படித்து மகிழ்ந்திருப்பதும் மறக்கமுடியாத பொன்னான நாட்களாகும்.

மாணவர்களை ஊக்குவிப்பதற்காக தனது சொந்தச் செலவில் இந்தியா, இலங்கையிலிருந்தும் புத்தகங்களை வேண்டி இங்கு வாழும் மாணவர்களுக்குப் பரிசளித்து அவர்களை ஊக்குவித்தார். அப்போது பல தமிழர்கள் காசு பணத்தைத் தேடிச் சேர்க்க இந்த வள்ளலோ வருங்காலச் சந்ததிகள்மீது அதிக அக்கறைகொண்டு உழைத்து தான்பெற்ற கல்வியை ஏனையோருக்கு அள்ளிவழங்கி மகிழ்தார். எனது மூன்று பிள்ளைகளும் இச்சஞ்சிகைமூலம் தமிழ் எழுதி வாசித்து வளர்ந்தார்கள் மகிழ்ந்தார்கள் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் பெருமையாக எடுத்துரைத்து மகிழ்கின்றேன்.
இவரது பணிகளோ மாணவமணிகளை ஊக்குவிக்கவும் பெற்றோரை விழிப்படையச் செய்யவும் அனைவரையும் மகிழ்வுறச்செய்யவும் வருடாவருடம் விழா எடுப்பார். மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார். பெற்றோரை மகிழ்வுறச்செய்தார். மாணவர்களாலேயே தயாரிக்கப்பட்ட பல கலை நிகழ்வுகளை நடாத்தி மாணவர்களைக் கலை ஆர்வமுள்ளவர்களாக வளர்த்தெடுத்தார். தமிழ்க்கலைக்கு உற்சாகமூட்டினார். இப்படி இவரது விழாமேடைகளில் தோன்றிய பல சிறுவர்கள் இன்று வளர்ந்து கலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் எனப் பலதுறைகளில் புகழ்பூத்துக்கொண்டிருப்பது பெருமையாகும். அன்றைய காலத்தில் இப்போட்டிகளை நடாத்த நானும் நடுவர்களில் ஒருவராக இருந்து கடமையாற்றிய நினைவும் எனக்கு வந்துபோகும் இப்போது ஆனந்தம்தான்.

மகாகவி பாரதியார் சொர்ப்ப காலம்தான் இப்பூமியில் வாழ்ந்து இன்றும் என்றும் அழியாப்புகழுடன் சென்றான். அவரைப்போலதான் அமரர் சின்ன இராஜேஸ்வரனும் சொர்ப்ப காலம் எம்மோடு வாழ்ந்தாலும் அவர் விட்டுச் சென்ற பணிகளோ காலத்தால் அழிக்கமுடியாது தமிழினம் என்றும் நினைவுகொள்ளும். அர்பணிப்போடு வாழ்ந்த இவர் வாகன விபத்து ஒன்றில் அதுவும் பட்டிமன்றப் பேச்சுக்கு சுவீஸ்லாந்துக்குச் சென்றுவரும் வேளையிலேயே தனது நண்பர்களுடன் வரும்பொழுது வாகன விபத்தில் சிக்குண்டு பலியான துயர சம்பவம் 1994ம் ஆண்டு நடைபெற்றபொழுது இந்த உலகைவிட்டே நிரந்தரமாகப் பிரிந்தார் எனது அன்பு நண்பன்.

இவரின் திறமைகளோ ஏராளம். ஒரு பல்துறைசார்ந்த திறமைசாலி. எழுத்து, பேச்சு, விவாதம,; இலக்கியம், தமிழ் எனப் பல ஆளுமைகொண்டவர். நல்லதொரு வாசகர், சிந்தனையாளர், பொதுவுடமைவாதி, சித்தாந்தவாதி, அரசியல்வாதி, விமர்சகர், பேச்சாளர், பட்டிமன்றப்பேச்சாளர், சஞ்சிகை ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர், நகைச்சுவையாளர், கதைஆசிரியர் எனப் பலதுறைகளிலும் சகலகலா வல்லவனாகத்தான் திகழ்ந்தார். பலதுறை ஆளுமைபடைத்த இவர் உயிர்களுக்கு எங்கு அநியாயம் வந்தாலும் துணிச்சலாகத் தட்டிக்கேட்டு நியாயம்பெற்று நீதிகிடைக்கப் பாடுபடுவார்.

மேலாக பேசக்கதைக்க இனிமையானவர். எப்போதும் நகைச்சவை உணர்வுகளோடு அணுகிப் பலரின் இதயங்களை வெல்லும் ஆற்றல்படைத்த திறமைசாலி என்றுதான் நான் கூறுவேன். முயற்சி, தேடல், உழைப்பு நிறைந்தவர். தனது சொந்தப் பணத்தால் தமிழுக்கும் தமிழனத்திற்கும் அரும்பாடுபட்டு உழைத்தவர் இந்தப்பிதாமகன் இன்றிருந்தால் 70வயதை (10-5-1950) 2020ம் ஆண்டில் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்.விழா களைகட்டியிருக்கும். என்ன செய்யமுடியும் காலன் கையில் 1994ம் ஆண்டு அகப்பட்டு எம்மைவிட்டுப் பிரிந்தாரே. இதுவே அவரோடு பழகிய அனைத்து நட்புக்களுக்கும் பேரிடியாக அமைந்தது.

அன்னாரின் மறைவுக்குப் பின்பு அவரது துணைவியார் திருமதி புனிதமலர் இராஜேஸ்வரன் அவர்கள் இச்சஞ்சிகையின் ஆசிரியராகச் செயற்பட்டார். (1994 – 1999) ஐந்து வருடங்கள் அவர் ஆசிரியராக இருந்த காலத்திலும் இச்சஞ்சிகை மாணவர்களின் அறிவுப்பசியைப் பூர்த்திசெய்தது. கால ஓட்டத்தில் அவரது உடல்நிலையும் பாதிப்படைய இச்சஞ்சிகையும் நின்றுபோனது வரலாறாகியது.

ஆம்..சிறுவர் அமுதம் சஞ்சிகை நின்றுபோனாலும் புலம்பெயர் நாடான யேர்மனியில் பத்து வருடங்களாக வெளிவந்து தமிழ்பணியாற்றியமை போற்றுதலுக்குரிய விடையமாகும். இச்சஞ்சிகையில் எழுதி வளர்ந்த மாணவ மணிகள், வாசகர்கள், இவர்களோடு அன்றும் இன்றும் ஒன்றுசெர்ந்து வாழ்ந்த நட்புக்கள், தோழர்கள், தோழியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைவரும் அமரர் சின்ன இராஜேஸ்வரனை நினைவுகொண்டு மனமார வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள்.

என்னோடு ஆருயிர்த்தோழனாக, நண்பனாக, ஆலோசகனாக எனது குடும்பத்தில் ஒருவனாக இருந்து வழிகாட்டினார். மண் சஞ்சிகையின் ஆலோசகராகவும் அதன் முன்னேற்றத்திற்கு அச்சாணியாகவும் இருந்து செயற்பட்டார். மண் சஞ்சிகையால் எடுக்கப்பட்ட ஆண்டு விழாக்களில் சிறப்புரையாற்றியதுடன் பெறுமதி மிக்க நூல்களையும் பரிசுகளையும் மாணவமணிகளுக்கு அன்பளிப்பாக வழங்கி அனைவரின் பாராட்டைப் பெற்றவர்.

நம் சமூகத்துக்கு ஆற்றிய பல்வேறு பணிகளுக்காக அவரின் செயற்பாடுகளை உலகறியச் செய்யவேண்டும் என்னும் நல்நோக்கில் அவரை நினைவுகூர்ந்து, அவரின் 10வது ஆண்டு நினைவு தினத்தில் 2004ம் ஆண்டில் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருடன் நான் வாழும் டியூஸ்பேர்க் நகரில் அவரைப்பற்றிய ஒரு நினைவஞ்சலி மலரை வெளியீடு செய்தோம். இந்தச் சிறிய விழாவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் எனச்சுமார் நூறுபேர்வரை கலந்துகொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவரது நினைவுகளும் மீட்டு அவரின் பணிகளுக்கு நன்றி செலுத்தப்பட்டது.
இன்று எனது அருமை நண்பர், தோழர் மறைந்து 25 வருடங்கள் கழிந்தாலும் அவரது நினைவுகள் மனதைவிட்டு அகலவில்லை. அவர் உயிருடன் இருந்திருந்தால் 2020 வைகாசி மாதம் 10ம் திகதி 70வது வயதைப் பூர்த்திசெய்து விழாக்கொண்டாடி இருப்போம். அவர் நம்மிடையே இல்லாமல் போனது துரதிஸ்டவசமே.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னொற்றான் கொல்லெனுஞ் சொல் - குறள்

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க அவரது ஒரேயொரு மகள் திருமதி பிங்கலை செந்திலன் அவர்களும் அவரது தாயாரும் அவரது பணிகளை உலகறியச் செய்வதற்காக, தந்தையால் வெளியீடு செய்யப்பட்ட அத்தனை சிறுவர் அமுதம் சஞ்சிகைகளையும் இணையத்தில் வாசிப்பதற்குரிய கணனிமயப்படுத்தல் பதிவில் ஈடுபட்டிருப்பது சிறந்த பணியாகும். அவரின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது. பாராட்டப்படவேண்டிய விடையமாகும். எனவே அமரர் இராஜேஸ்வரனோடு வாழ்ந்த நாம் எல்லோரும் அவரது மகளுக்கு வேண்டிய ஒத்தாசைகளை வழங்குவோம். அவரோடு பழகிய நினைவுகள், மறக்கமுடியாத சம்பவங்கள், தமிழோடு வாழ்ந்த அனுபவங்கள, களிப்புற்ற நினைவுள்;  போன்றவற்றை எழுத அவரது மகளுக்கு அனுப்பி வைத்தால் அவர் கணனிப்பதிவு ஆக்கி உலகறியச்செய்வார் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. ஆகவே நாம் ஒவ்வொருவரும் அவரைப்பற்றிய பதிவுகளை அனுப்பி உதவுவோம் என அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

“பேனாப் போராளிகளும் காலத்தால் அழியாத வரலாற்று நாயகர்களே”
என்றும் அன்னாரின் நினைவுகளுடன்!...அவரது உற்ற நண்பன்!..

வைரமுத்து சிவராசா - பிரதம ஆசிரியர்
“மண்” கல்வி, கலை, இலக்கிய, சமூக சஞ்சிகை
 டியூஸ்பேர்க் - யேர்மனி – 10-05-2020




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக