நினைவுகள் ~ புனிதமலர் இராஜேஸ்வரன்
1980 களில் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் அன்று அந்தந்த நாட்டு மொழியை மட்டும் படிக்கும் சூழ்நிலையாக இருந்தது. தமிழை பெற்றோர் பேச்சு மூலமாகவும், திரைப் படங்கள் மூலமாகவும் மட்டும் அறிந்து கொண்டனர். இது புலம் பெயர் தமிழர்கள் பலருக்கு வருத்தத்தை தந்தது. சிறுவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், தன்னம்பிக்கையாலும் சின்னத்தம்பி இராஜேஸ்வரன் என்ற தனி ஒருவரால் சிறுவர் அமுதம் என்ற சிறுவர் சஞ்சிகை ஆரம்பிக்கப் பட்டது. மாதமொரு சஞ்சிகையாக சிறுவர் அமுதம் வெளிவந்தது. தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள் கொண்ட கையெழுத்துப் பிரதியாக 14.01.1990 தைப்பொங்கல் அன்று முதல் சஞ்சிகை வெளி வந்தது. சின்ன இராஜேஸ்வரனின் குழந்தை சிறுவர் அமுதம் மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று ஐரோப்பிய நாடுகளில் அறியப் பட்டது. சிறுவர்கள் எழுதிய கதைகள் கட்டுரை, வினா விடைப் போட்டிகள் போன்றன சஞ்சிகையை அலங்கரித்தன. சிறுவர் அமுதம் சிறுவர்களுக்கு தமிழ் மொழியை எழுத்து வடிவமாக அறியத் தந்தது என்று சொன்னால் மிகையாகாது. இப்பெருமை சிறுவர் அமுதத்தையே சேரும். சிறுவர் அமுதத் தந்தை என்று அறியப்படட சின்ன இராஜேஸ்வரன் 19.04.1994 அன்று மோட்டார் வண்டி விபத்தில் அகால மரணம் அடைந்தார். சிறுவர் அமுதம் சஞ்சிகை நிறுத்தப் படக் கூடாது என்ற நண்பர்களின் ஊக்கத்தினால் சஞ்சிகையை நானும் என் மகளும் ஐந்து வருடங்களுக்கு நடத்தி வந்தோம். சிறு சிறு இடர்பாடுகளால் சஞ்சிகையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இந்த வலைப்பக்கம் மூலம் எங்கள் சஞ்சிகைகளை ஓன்லைனில் பதிவு செய்கிறோம்.
அன்புடன்
சிறுவர் அமுதம் ஆசிரியை
புனிதமலர் இராஜேஸ்வரன்