இன்று அன்று: சிறுவர் விழாவில் பாரதியாக |
"சிறுவர் அமுதம்" ஆசிரியர் மறைந்த திரு ராஜேஸ்வரன் மாமா அவர்களின் 70 ஆவது பிறந்தநாளான இன்று அவரைப்பற்றிய சில ஞாபகங்களை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
இலங்கையை விட்டு 80 களில் ஜெர்மனிக்கு வந்த என்னைப்போன்றோருக்கு எமது மொழி, கலை, கலாச்சாரத்தை கற்பதற்கு எமது பெற்றோரின் ஊக்கத்தோடு, ஜெர்மனியில் வெளிவந்த சஞ்சிகைகளும் மிகவும் உதவியாக இருந்தன. அதில் குறிப்பாக "சிறுவர் அமுதம்" சஞ்சிகை எனக்கு தமிழ்மொழியின் மேல் இருந்த ஆர்வத்தை ஊக்குவித்து என்னுடைய வளர்ச்சியில் பெரும் பங்குவகித்தது.
"சிறுவர் அமுதம்" சஞ்சிகையில் என்னுடைய கதைகள், ஓவியங்கள், குறுக்கெழுத்துப்போட்டிகள் எனப் பல படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. நான் எழுதியவற்றை சஞ்சிகையில் பார்க்கும்போது அளவில்லாத சந்தோஷம் உண்டாகி அடுத்தமுறை இன்னும் சிறப்பாக ஏதாவது எழுதவேண்டும் என்று தோன்றும்.ராஜேஸ்வரன் மாமா அவர்கள் தன்னை முழுமையாக அர்ப்பணித்து "சிறுவர் அமுதம்" சஞ்சிகையை நடாத்தி வந்தார், அவருக்கு பெரும் உதவியாக அவருடைய மனைவியும், மகளும் இருந்தார்கள். சஞ்சிகையோடு நின்று விடாமல் பாடசாலை, கலைநிகழ்ச்சிகள், போட்டிநிகழ்ச்சிகள் என தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், புலம்பெயர்ந்து வந்த பிள்ளைகள் தமிழையும், கலாசாரத்தையும் மறக்காமல் இருப்பதற்கும் அவர் மிகவும் பாடுபட்டார்.
"சிறுவர் அமுதம்" நடாத்திய பேச்சுப்போட்டிகளிலும் நான் பங்குபற்றியிருக்கிறேன். குறிப்பாக "மகாத்மா காந்தியைப்" பற்றி நன் பேசி எனக்கு முதல் பரிசு கிடைத்ததும், அதற்கு எனக்கு கிடைத்த பாராட்டும் என்னால் என்றும் மறக்கமுடியாது. எனக்கு பரதநாட்டியத்தில் இருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட ராஜேஸ்வரன் மாமா எனக்கு பரிசாக "பரதக்கலை" என்ற புத்தகத்தை தந்தது எனக்கு அளவில்லா சந்தோஷத்தை தந்தது. ஏதாவது ஒரு பரிசு கொடுக்காமல் ஒவ்வொருவருக்கும் எது பிடிக்கும், எது தேவை என்று அறிந்து அவர் செயற் பட்டது மிகவும் சிறப்பான விஷயம்.
சிறு வயதில் நான் பார்த்து வியந்த உயர்ந்த மனிதர்களில் அவரும் ஒருவர், சிறிதும் தன்னலம் இல்லாமல் பொதுநலமே தனது வாழ்க்கையாகக் கொண்டவர். அன்பாகவும், அக்கறையுடனும், பண்புடனும் பேசுபவர். எனது தந்தை தியாகேஸ்வரனும் ராஜேஸ்வரன் மாமாமேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். "சிறுவர் அமுதம்" சஞ்சிகையில் என்னுடைய தந்தையின் படைப்புக்களும் பல இடம்பெற்றிருந்தன.
எல்லோருக்கும் மிகவும் பிடித்த அமுதம் சஞ்சிகையை "ஒன்லைனில்" பார்க்க நானும் ஆர்வமாயுள்ளேன். ராஜேஸ்வரன் மாமாவுக்கு பிறகு அவருடைய கலைப்பணியை தொடர்ந்து நடாத்தி வந்த அவருடைய மனைவிக்கும், மகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
ராஜேஸ்வரன் மாமா எங்களுடன் இல்லாவிட்டாலும் அவருடைய நினைவுகளும் படைப்புக்களும் எம்மவர் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும்.
நன்றி
இப்படிக்கு
பிரபா பரணீதரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக